v

அம்பாள் வழிபாடு:விஜயதசமியான  மாலையில், வீட்டில் திருவிளக்கேற்றி, அம்பாள் முன்னிலையில் இதனைப் படியுங்கள். அம்பிகை அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெறலாம். ஒருவர் சொல்ல மற்றவர்கள் தொடர்ந்து சொல்வது சிறந்தது.

* உதய நேரத்தில் கீழ்வானில் தோன்றும்,சூரியனின் சிவந்த ஒளி போன்ற நெற்றித் திலகத்தைச் சூடியிருப்பவளே! நல்லுணர்வு உடைய அன்பர்கள் போற்றுகின்ற மாணிக்கமே! மாதுளம்பூ போன்று செக்கச் சிவந்தவளே! மலரிலே வீற்றிருக்கும் திருமகள் துதிக்கின்ற மின்னல் போன்றவளே! குங்குமம் போன்ற சிவந்த மேனிவண்ணம் கொண்டவளே! அபிராமி அன்னையே! நீயே எனக்கு உற்ற துணை!
* படைத்தல், காத்தல், அழித்தல் முதலான மூன்று தொழில்களையும் நிகழ்த்துபவளே! கொடி போன்ற இடையினைக் கொண்டவளே! அடியார்களுக்கு ஞானம் அருளும் மனோன்மணியே! ஜடாமுடியை உடைய சிவபெருமான் பருகிய விஷத்தினை அமுதமாக்கிய பராசக்தித்தாயே! தாமரை மலரை விட, மென்மையான உன் திருப்பாதங்களை அடியேனின் தலைமீது வைத்து அருள் செய்வாயாக.
* தயிரைக் கடையும் மத்து எவ்வாறு சுழலுமோ, அதுபோல என் உயிரானது பிறவிச்சுழலில் சுற்றிச் சுற்றி வருகிறது. இதிலிருந்து என்னைக் காப்பாற்றி, உயிருக்கு அடைக்கலம்
தருவாயாக. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவரும், நிலவைச் சூடிநிற்கும் ஈசனும், மகாவிஷ்ணுவும், சதா சர்வகாலமும் உன்னுடைய சிவந்த திருப்பாதங்களை ஆராதனை செய்து போற்றும் போது, சாதாரணமானவர்களான நாங்கள் எம்மாத்திரம்? உன் பாதங்களில் சரணடைகிறோம்.
* எனது அறிவில் ஆனந்தமாக நிறைந்திருப்பவளே! என்றும் நிலையான முக்தி இன்பத்தை உயிர்களுக்கு அருள்பவளே! நான்கு வேதங்களும் விளக்கும் ஆதியந்தப் பொருளே! உன் திருவடி தாமரைகளை பூஜித்து மகிழ்கிறேன்.
*பதினான்கு உலகங்களையும் உருவாக்கியவளே! நஞ்சை உண்ட நீலகண்டனுக்கும் மூத்தவளே! இளமை பொருந்திய மகாவிஷ்ணுவின் தங்கையே! உன்னைத் தவிர, எனக்கு இவ்வுலகில் வேறு அடைக்கலம் யாருமில்லை.

மங்கள சண்டிகை பாடுங்க!

அம்பிகைக்குரிய துதிகளில்
“மங்களசண்டிகை மகிமை வாய்ந்தது.
இதனை விஜயதசமிநாளில் படிப்பது
மிகவும் சிறப்பு. செவ்வாய்,
வெள்ளிக்கிழமைகளிலும்,
பவுர்ணமி நாட்களில் இதைப் பாராயணம்
செய்வதால் நன்மை உண்டாகும். அம்பிகையிடம் கோரிக்கை வைத்து, அது நிறைவேற
தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை
படிப்பதும் வழக்கம்.
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்
படைப்பவள் அவளே
காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி – அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி –
ஜயஜயசங்கரி கவுரி மனோகரி
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி
திருவருள் தருவாள் தேவி
கருணையில் கங்கை கண்ணனின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருவினை தீரும், பழவினை ஓடும்
அருள் மழை பொழிபவள் – நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

இனிப்பை எறியும் விழா: பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து, தன் பிறந்தவீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சியே விஜயதசமி என்கிறார்கள் மேற்கு வங்காள மக்கள். இந்த சமயத்தில் பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும் அவரவர் பிறந்த வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர்களைப்பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பர். தன் வீட்டில் இருக்கும் ஆபரணங்களையும், இனிப்புப் பதார்த்தங்களையும் மகள் மீது அள்ளி எறிந்து மகிழ்வர். பிறந்த வீட்டிற்கு, மகள் வர முடியாமல் போனால், பெற்றோரே நேரடியாக அவள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர். பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை உண்டாக்கும் பாலமாக விஜயதசமி திகழ்கிறது.

செல்வம் தரும் வன்னிமரம்: மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமியன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறித்து பூஜையில் வைப்பர். வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். இளைஞர்கள் இந்நாளில் வன்னியிலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசி பெறுவர். பெரியவர்களும் ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் அந்த இலைகளைக் கொடுத்து “இதை தங்கமாக நினைத்து பெற்றுக்கொள்ளுங்கள் என சொல்லி ஆசீர்வதிப்பர்.

இங்கே தினமும் விஜயதசம்:
 நாமெல்லாம் வருடத்தில் ஒருநாள் தான்,விஜயதசமி கொண்டாடுகிறோம். கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் தினமும் விஜயதசமி தான்! ஏனெனில், இங்கே குழந்தைகள் சிறந்த கல்வி பெறதினமும் பூஜை செய்து வரலாம். தல வரலாறு: இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது கணக்குப்பிள்ளையை கோயில் கணக்குகளை எடுத்துவருமாறு பணித்தார். அந்நேரத்தில், அவர் கணக்கை சரிவர முடிக்கவில்லை. எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே, இன்னம்பூரில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் அரசர் கணக்குப்பிள்ளையை அரண்மனைக்கு அழைத்தார். “”இதுவரை பார்த்த கோயில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர். கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார். பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன. சிவபெருமானே தன்னைப் போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர். இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்தார். அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் “எழுத்தறிநாதர் என்று பெயர் பெற்றார். நாக்கில் எழுதுதல்: ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் எழுதுகிறார்கள். தினமும் இந்த வழிபாடு இக்கோயிலில் நடக்கிறது. பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் அர்ச்சனை செய்தால் நன்றாகப் பேசும் திறன் உண்டாகும்

Comments