pon

பொங்கல் வைக்க உகந்த நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி.

கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள்.

இன்றைய தைப் பொங்கல், சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுவது நமக்குத் தெரியும். ஆனால், துவக்க காலகட்டங்களில், சந்திரனுக்குத் தான் தை மாதம் மட்டுமின்றி, பிற மாதங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு.

தமிழகத்தில், துவக்க காலங்களில், சந்திரனின் வளர்ச்சி, தேய்வை அடிப்படையாக வைத்தே, நாள் கணக்கீடு ஏற்பட்டது. அதன் பின், சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்ட கணக்கீடு வந்திருக்க வேண்டும்.

சந்திரமான கணக்கீட்டில் பூசம்:

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர். தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது. திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம். திஷ்யம்-தைஷ்யம்- தைசம்- தை என, மாற்றம் கொண்டது. தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது. பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம். அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. சங்க இலக்கியங்களில், ‘தைஇயத் திங்கள்’ என, தை மாதம் குறிப்பிடப்படுகிறது. தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை. புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல். பூர்ணிமாந்த கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை ‘தவத் தைந்நீராடல்’ என, குறிப்பிடுகிறது. இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர். பக்தி இயக்க காலகட்டத்தில், சைவமும், வைணவமும் இதை தத்தமக்கு ஏற்ப மாற்றிக் கொண்டன.

தைப்பூசம் பற்றிய குறிப்பு, மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு பற்றிய நூலில் முதன்மையாக காணப்படுகிறது. புத்தர் வான்வழியாக இலங்கை சென்ற போது, இலங்கையின் பூர்வ குடிகளான யட்சர்கள், மாவலி கங்கையாற்றின் கரையில், தைப்பூச விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என, மகாவம்சம் குறிப்பிடுகிறது. யட்சர்கள், மங்கோலிய இனத்தவர்கள். அவர்களின் தலைவன் குபேரன். மிகப் பழமையான, தர்ம சூத்திர நூலான ஆபஸ்தம்ப சூத்திரத்தில், தைப்பூசத்தன்று, குபேரனுக்கு பால் பொங்கல் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது.

சவுரமான கணக்கீட்டில் மகர சங்கராந்தி:

சவுரமானக் கணக்கின்படி, ஓராண்டில், இரண்டு விஷுக்கள், இரண்டு அயனங்கள் வருகின்றன. ஆண்டை, ஒரு வட்டமாக கணக்கிட்டால், முதல் 90 டிகிரி, சித்திரை விஷூ; அடுத்தது ஆடி அயனம்; மூன்றாவது ஐப்பசி விஷூ; நான்காவது மகர சங்கரமணம் அல்லது தைப் பிறப்பு. திருவலஞ்சுழி தலத்தில் உள்ள ராஜராஜன் காலத்து கல்வெட்டில், இரண்டு விஷூக்களும், இரண்டு அயனங்களும் முதன்முறையாக குறிப்பிடப்படுகின்றன. வேதத்திலும், உத்தராயனத்தை ஒளிக்காலம் எனவும், தட்சிணாயனத்தை இருட்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் வேறொரு குறிப்பு காணப்படுகிறது. அதன்படி, ரத சப்தமி என்பது, மாசி மாத வளர்பிறை சப்தமி தான் என்றும், அன்று தான், சூரியன் வடக்கு நோக்கி திரும்புகிறது என்றும் மகாபாரதம் கூறுகிறது. அந்த நாளில் தான் பீஷ்மர் உயிர் துறந்தார். இவற்றின் அடிப்படையில் பார்த்தால், தை மாதப் பிறப்பு எப்போது உத்தராயனத் துவக்கமாக மாறியது எப்போது என, தெரியவில்லை.

எது பொங்கல்?

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். மேலும், சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதிய அடியார் நல்லாரும், அரும்பத உரைகாரரும், பொங்கல் என்ற சொல்லுக்கு கள் என, எழுதியுள்ளனர். இன்றும், அம்மன் கோவில்களில், மதுப்பொங்கல் பொங்கும் வழிபாடு உள்ளதை இதனுடன் இணைத்துக் காணலாம். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், ‘நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ என, சுட்டுகிறார். திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, ‘பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்கிறது. ஆக, சங்ககாலத்திலும், பக்தி இயக்க காலத்திலும், புழுக்கல் என்பது தான், பொங்கலாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

மதுப்பொங்கல்:

அப்படியானால், மதுப்பொங்கல் எப்படி வந்தது? இன்று, பொங்கலுக்கு முதல் நாள், போகி கொண்டாடப்படுகிறது. உண்மையில் அது பலராமனுக்கு உரிய திருவிழா. அவனை போகி என்ற பெயரால், பாண்டியர் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. அவனது ஆயுதம் கலப்பை. அவன் ஒரு விவசாய தெய்வம். மதுபானப் பிரியன். அவனுக்கு மதுப் பொங்கல் படைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்திலும், சங்க காலத்தில், பலராமன் வழிபாடு, விவசாயிகளின் வழிபாடாகவே இருந்திருக்கிறது. அதை, எந்தோவன் என்ற மானடவியல் அறிஞர், தன் பழங்குடிகள் பற்றிய நூல் ஒன்றில், 1927ல் குறிப்பிட்டுள்ளார். அப்போதைய பாம்பே மாகாணத்தில், காந்தேஷ் பகுதியில், பவ்ரா என்ற பழங்குடியினர், ‘நாக தீபாவளி’ கொண்டாடினர். நள்ளிரவில் மூங்கில் கழியில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு, ஆடவர் குழு ஊரை வலம் வருகிறது. குழுவை இரண்டு ஆடவர் வழிநடத்துவர். குழு ஒவ்வொரு வீட்டின் முன்பும் போய் நிற்கும். வீட்டின் பெண்கள், ஆடவரின் நெற்றியில், தீப்பந்தத்தின், முனையில் உள்ள கறுப்பு எண்ணெயை. வழித்து, திலகமிட்டு, மதுபானம் அளித்து அனுப்புவர். விடிந்த உடன், மாடுகளுக்கு அரிசி, தானியம் கலந்த பொங்கல் படைப்பர். இன்றும், இரவில் தான் போகி கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலையும் இதன் தொடர்ச்சியாக காணலாம்.

சேக்கிழாரின் குறிப்பு:

முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார். பெரியபுராணத்தில், மற்றொரு குறிப்பு காணப்படுகிறது. மள்ளர்கள், இந்திர தெய்வத்தை தொழுது நாற்று நட்டதாக, சேக்கிழார் தெரிவிக்கிறார். இதில் இருந்து, தை மாதப் பிறப்பு, சோழர் காலத்தில், பெரிய விழாவாக கொண்டாடப்படவில்லை என, தெரிகிறது. விஜயநகர பேரரசின் காலத்தில், அது பெரிய விழாவாக மாறியிருக்கலாம். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது. இருபதாம் நூற்றாண்டில், பெண்ணாகடத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், முதன் முதலாக, பொங்கல் வாழ்த்து அட்டை தயாரித்து அச்சிட்டார். அதன் பின், தைப் பொங்கலுக்கு, தமிழர் திருநாள் என்ற அடையாளம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தது. ஐரோப்பியர் வருகையால், நமது அன்றாட நடவடிக்கைகள், ஆங்கில காலண்டர் கணக்கின்படி அமைய நேரிட்டது. அதனாலும், தைப் பொங்கலுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.

Comments