ஆனைக்கோட்டை
டெல்லியில் சில மாதங்களுக்கு முன் பரபரப்பாகப் பேசப்பட்ட அமெரிக்க சுற்றுலாப்பயணி- ஆட்டோ டிரைவர் காதல் திருமணத்துக்குப் பின் சோகத்தில் முடிந்துள்ளது. காதல் மனைவியைக் கொன்ற கணவன், தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த எரின் வில்லிங்கர் (35) சுற்றுலாப் பயணி யாக இந்தியா வந்தார். காதலின் சின்னமான தாஜ்மகாலின் அழ கைப் பார்த்து வியந்தவர், ஆக்ரா நகரில் பரவிக் கிடக்கும் பாலித்தீன் பைகள் மற்றும் குப்பைகளைப் பார்த்து மனம் வருந்தினார். சுத்தமான ஆக்ரா என்ற இயக்கத்தைத் தொடங்கி, நகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கினார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் பண்டி(32)யுடன் காதல் ஏற்பட்டது. இருவரின் காதல் விவகாரம் டெல்லியில் பரவலாகப் பேசப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர்; ஷகீத் நகர் காலனியில் சேர்ந்து வசித்தனர். சில நாள்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட எரின் தாஜ்கஞ்ச் பகுதியிலும், பண்டி சஞ்சய் நகரிலும் தனித்தனியே வசித்தனர்.
எரின், சுற்றுலா காவல்துறை மூலம் புகார் செய்து, குடும்பநல நீதிமன்றத்தை நாடினார். இருப்பி னும் இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, பண்டியின் ஆட்டோவில் எரின் வியாழக்கிழமை ஏறியுள்ளார். ராஜ்புத் சுங்கியின் டக்கர் சாலை அருகே சென்றதும் எரினைக் கத்தியால் குத்திக் கொன்ற பண்டி, சடலத்தை அங்கேயே வீசிவிட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், பெட்ரோல் ஊற்றி துணிகளை எரித்ததுடன் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்துத் தற்கொலை செய்து கொண்டார். தாஜ்கஞ்சின் போலீஸார் இரு உடல்களையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
தாஜ்கஞ்ச் காவல்துறை உதவி ஆய்வாளர் தீரேந்தர் யாதவ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘தன்னிடம் அப்போது இருந்த அமெரிக்க டாலர்கள் மீதுதான் பண்டிக்கு காதல் இருந்ததே தவிர தன்னிடம் அல்ல என எரினுக்கு தாமதமாக புரிந்திருக்கிறது. அதுதான் பிரச்சி னைக்கு காரணம். கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டுள்ளது” என்றார்.
அமெரிக்காவில் நர்ஸாகப் பணியாற்றிய எரினுக்கு அங்கு ஓர் ஆஸ்திரேலிய இளைஞனுடன் காதல் ஏற்பட்டது. எனினும், ஆக்ரா வந்தவர் பண்டியை விரும்பி மணமும் செய்து கொண்டார். இதன் பிறகு அவரை தேடி வந்த ஆஸ்திரேலிய இளைஞரையும் திருப்பி அனுப்பினார்.
இது திருமணத்திற்கு பிறகு தெரிய வந்து அது பற்றி மனைவியிடம் கேட்டிருக்கிறார் பண்ட்டி. இதேபோல், பண்டி ஏற்கெனவே மணமானவர் என்ற சந்தேகம் எரினுக்கும் இருந்துள் ளது. இதனால், இருவருக்கும் இடையே உருவான மோதல், அவர்கள் காதலை தகர்த்து விட்டது.
மேலும், 2008-ல் தல்லுவா எனும் ரிக்ஷாக்காரனின் கொலை வழக்கில் பண்டி கைது செய்யப் பட்டு, அவர் மீது வழக்கு நடந்து வருகிறது. இதை திருமணத்திற்கு பிறகு அறிந்த எரின், அதைப் பற்றிக் கேட்டுள்ளார். இந்தக் காரணங்களால்தான் இருவருக்கு மிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டுப் பெண்களை காதல் மணம் புரியும் ஆக்ரா இளைஞர்கள்
காதலின் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மகாலைக் காணவரும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர், ரிக்ஷாக்காரர்கள், தாஜ்மகால் அருகில் வசிக்கும் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுடன் காதல் வயப்படுவது புதிதல்ல.
தாஜ்மகாலை காணவரும் வெளிநாட்டு இளம்பெண்களை, கவர்வதற்காகவே ஆக்ரா இளைஞர்கள், பல்வேறு வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொள் கின்றனர். இதில், சிலர் தாம் மன்னன் ஷாஜகானின் வழி வந்தவர்கள் எனவும், தாஜ்மகாலை கட்டுவதற் காக பெர்ஷியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பரம்பரையை சேர்ந்தவர்கள் எனவும் கூறுவது உண்டு. தாஜ்மகால் அழகைப் பார்த்த காதல் மயக்கத்தில் உணர்ச்சி வசப்படும் இளம் பெண்கள், ஆக்ரா இளைஞர்களின் வலையில் எளிதாகச் சிக்கி விடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றனர். சிலர், அந்த பெண்களுடன் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதும் உண்டு.

Comments