2006976 (1)இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைதுசெய்தமை கண்டிக்கத்தக்கது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி இந்தியா வந்த போது மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்றார்.
அந்த பேச்சு வார்த்தையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது இலங்கையின் புதிய ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் தொடர ஆரம்பித்திருக்கிறது.
நேற்றைய முன்தினம் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 100–க்கும் மேற்பட்டோர் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து, 86 மீனவர்களை கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் 11 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும், 3 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் ராஜபக்ஷவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இலங்கையின் புதிய ஆட்சியில் மிகப்பெரிய அளவில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்ட 81 படகுகள் தமிழக மீனவர்களிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை.
சிறை பிடிக்கப்பட்ட 81 படகுகளை சரி செய்தும், சேதப்படுத்திய வலைகளுக்கும், படகுகளுக்கும் உரிய நிவாரணமும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இலங்கை அரசிடம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை காலதாமதமின்றி உடனடியாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசும், மத்திய அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்வதற்கும், மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர, சுமூக தீர்வு ஏற்படவும், இப்பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

Comments