வதயா
அட்ட அவதானியாக
தொட்டதெல்லம் துலங்க
பட்டதெல்லம் மறந்து
கிட்டியதை நினைந்து
மட்டில்லா மகிழ்வு.
கடந்தது வாழ்வு……!

ஏற்றங்கள்
இறுக்கங்கள்
மாற்றங்கள்
மன முற்றத்தில்
கோலம் போட
சீற்றங்கள் தணிந்து
சீரான நகர்வில்
இன்றைய வாழ்வு…!

நிலைக் கண்ணாடி
என் எழிலை
ஒப்பனையின்றி
ஒப்புவிக்கின்றது.
என்னோடு சேர்ந்து
சிரித்தும் அழுதும்
இன்று வரை
உயர்ந்த நட்பாகி
இசைகின்றது…!

ஞாபங்கள் தீ
மூட்ட முன்னைய
நாட்கள் இனிக்கின்றது.
காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
நேசமாகி தூரமாகாத
தாரமாகி நாம்
இருவர் நமக்கிருவர்
என்பது போதுமான
வாழ்வாகி வரமானது.!

காலத்தின் கடப்பு
வேகமாகி விட்டது.
மௌனமான சில
மாற்றங்கள். கண்ணாடி
காட்சியை காட்டுகின்றது.
அடர்ந்த முடி
அறுவடையானது.
முகத்தில் சுருக்கம்
தினம் கிழித்து
வீசிய நாட்காட்டி
நகைக்கின்றது.

விழிக்கின்றேன்
படுக்கை அறை
பக்கத்தில் மருந்து
பெட்டகம்.எட்டும்
தூரத்தில் கைத் தடி..
ஓரத்தில் தொலைக்காட்சி.
மாட்டி விடப் பட்ட
அப்பியாச மட்டையில்
அட்டவணை..முறை…!

பயிற்சி இல்லாத
முயற்சி. மூச்சு
மக்கர் பண்ணுது.
கடைப் பிடித்தால்
உடலில் உயிர்
ஒட்டுமாம் உறுதி..
மரணம் தள்ளி
நின்று வேடிக்கை
பார்க்குமா? இது
இன்றைய கேள்வி..!

இன்று எனது
பிறந்த நாளாம்
முத்தான பேத்தி
முதல் பரிசாகிட
சத்தமின்றி முத்தங்கள்.
இரத்த பந்தங்களின்
வாழ்த்து விரிசையாக
வண்ணக் கவிதைகள்
முகநூலில் முற்றுகை
நட்புக்களின்
நல்லாசிகள்…

மீண்டும் குழந்தையாகி
தூண்டும் கனவுகள்
ஓரமாகி கண்ணில்
ஈரமாகி இனிக்கின்றது
திரும்பி பார்க்கின்றேன்
பல மைல் தூரம்
ஓடி விட்டேன்…
எடுத்துச் செல்லவோ
விட்டுச் செல்லவோ
ஏது நான் செய்தேன்
உறைக்கின்றது உண்மை..!

Comments