1சிறிலங்காவை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டிருந்த முதற் தீர்மானம் தொட்டு, இற்றை வரை ஜெனீவா பல்வேறு வகையிலும் உற்று நோக்கப்படும் மைய இடமாக மாறியுள்ளது.

தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபையின் 32வது கூட்டத் தொடர், அதன் ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான வாய்மொழி அறிக்கையினை மையப்படுத்தி கவனம் கூவியங் கொண்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதலை சிறிலங்கா அரசாங்கம் ஜெனீவாவில் வழங்கியிருந்தது.

இந்த ஒப்புதலின் செயற்பாடுகள் எவ்வளது தூரம் சிறிலங்காவினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய அவதானிப்பே, ஆணையாளர் அவர்களது வாய்மொழியறிக்கையாக அமைய இருக்கின்றது.

கூட்டத் தொடரின் தொடக்க நாள் உரையின் போது, இடைமாற்றுக்கால நீதி தொடர்பான 30-1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் தமது கடப்பாட்டை நிறைவேற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின், முயற்சிகளுக்கு ஒரு விரிவான மூலோபாயம் தேவை என தெரிவித்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் {ஹசேன் அவர்கள் ஒருங்கிணைந்த மற்றும் வரிசைமுறைப்பபடி உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளைக் கொண்டதாக அது செயற்படுத்தப்பட வேண்டும எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, எல்லா அரசாங்கங்களும் அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கு முழுமையான மதிப்பை அளிக்குமாறும், ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளின் பரிந்துரைகளையும், தமது பணியகத்தின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரத்தில் தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரல் என்ன என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
தமிழினத்தின் மீது நடந்தேறிய பாரிய குற்றங்களுக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமென தமிழர் அமைப்புக்கள் யாவும் ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தாலும், இனப்படுகொலை என்பதனை வெளிப்படையாக வலியுறுத்துவதில் பலரும் தயக்கம் காட்டியிருந்தனர்.

இனப்படுகொலை என்பதனை முன்னிறுத்தினால் பல்வேறு நாடுகளின் ஆதரவினை திரட்ட முடியாது என்பது தயக்கத்துக்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டதோடு, அனைத்துலக விசாரணையினை எட்டுவதற்கான தந்திரோபாயமெனவும் கூறப்பட்டிருந்தது.

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாக மட்டும் இருக்கவில்லை. பல்வேறு அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களதும், பல நாடுகளதும் கோரிக்கையாகவும் அன்று இருந்தது.

‘அனைத்துலக விசாரணை’ என்பது ஒவ்வொரு தரப்பாலும், தங்கள் தங்கள் நோக்கு நிலையில் இருந்து அணுகப்பட்டிருந்ததோடு, தங்கள் நலன்களை அடைவதற்கான நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக இதனைக் கையாண்டிருந்தனர்.

தொடக்கம் முதலே தமிழினத்தின் மீது நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதில் உறுதியாக இருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக விசாரணை என்ற நிலைக்குள் மட்டும் நின்றுவிடாது, தமிழர்கள் வேண்டுவது பரிகார நீதியே ( Remedial Justice For Tamils) என்பதனை வலியுறுத்தியிருந்தது.

கூடவே இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையொன்று ( International Protection Mechanism) வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தது. நீதிக்கான வேட்கையில் தமிழர்களின் தெளிவான நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக இதனைக் காணலாம்.

தொடர்ந்து சிறிலங்கா தொடர்பில் ஐ.நா அலுவலகம் கடந்தாண்டு முன்னெடுத்திருந்த விசாரணையின் காலப்பகுதியில், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நாவை வலியுறுத்தியிருந்தது.

கோரிக்கையாக மட்டுமல்லாது செயலாக்கமாக 1.7 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் ஒப்பங்களை பெற்ற மில்லியன் கையெழுத்தும் இயக்கமாகவும் இதனை முன்னெடுத்திருந்தது.

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா அலுவலகத்தின் விசாரணை அறிக்கை ஓர் கலப்பு நீதிமன்றத்துக்கான பரிந்துரையினை செய்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதனை முன்னுணர்ந்து, அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற இக்கோரிக்கை, முன்வைக்கப்பட்டிருந்தi இங்கு மிக முக்கியமானது.

அனைத்துலக விசாரணை என்ற கோரிக்கையோடு பலரும் ஓர் தேக்க நிலையினை அடைந்திருந்த வேளை, நீதிக்கான வேட்கையில் தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாக இதனைக் காணலாம்.

ஆழமான பல உண்மைகளுடன் சட்டமுறையிலான முக்கியமானதொரு ஆவணமாக ஐ.நா அலுவலகத்தின் விசாரணை அறிக்கை வெளிவந்திருந்த போதும், அனைத்துலக நீதிமன்றத்துக்கு மாறாக கலப்பு நீதிமன்றமொன்றத்துக்கே தனது பரிந்துரையினைச் செய்திருந்தது.

சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பது, ஒவ்வொரு தரப்பும் தம்தம் தேவைகளை அடைவதற்கான விடயமாக கையாண்டிருந்ததாக, இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல், சிறிலங்காவில் ஓர் ஆட்சிமாற்றத்தின் பின்னரான மேற்குலகத்தின் நிலைப்பாட்டில் இதனை புரிந்து கொள்ளலாம்.

அனைத்துலக விசாரணை என்ற புள்ளியில் சிறிலங்கா தவிர்ந்து, சந்திந்திருந்த அனைத்து தரப்புக்களும் , ஆட்சிமாற்றத்துக்கு பின்னராக வௌ;வேறு புள்ளிகளில் தனித்தும், கூட்டாகவும் நிற்கின்றன.

புள்ளிகளின் மாற்றம், தமிழர்களுக்கு. ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்திருந்த வேளையில், சிறீலங்காவில் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளின் வடிவமைப்பையும், நடைமுறைப்படுத்தப்படுதலையும் கண்காணிக்கவும், மற்றும் போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றை விசாரணை செய்து வழக்குத் தொடுவதற்கான நீதித்துறை நடவடிக்கைகளைக் கண்காணிக்கவுமென ஐந்து சட்ட நிபுணர்களைக் கொண்ட Monitoring Accountability Panel (MAP) எனப்படும் ஒரு பொறுப்புடைமை கண்காணிப்புக் குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்தது.

இனப்படுகொலை, போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களில் பங்காற்றிய ஆறு பன்னாட்டு நிபுணர்களை கொண்டதாக இக்கண்காணிப்பு குழு அமைந்தது.

கடந்த பல மாதங்களாக தனது பணியினை மேற்கொண்டு வருகின்ற இப்பன்னாட்டு நிபுணர் குழு, ஏலவே ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடுகளை நடத்தியிருந்ததோடு, பல்வேறு அறிக்கைகளையும் வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது.

இனப்படுகொலை – அனைத்துலக விசாரணை – தமிழர்களுக்கான பரிகார நீதி – அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை – சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்து – சிறிலங்காவை கண்காணிப்பும் பன்னாட்டு நிபுணர் குழு என ஒவ்வொரு காலகட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப தெளிவான நிகழ்ச்சி நிரலை வகுத்து ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கான வேட்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமையை இங்கு கவனிக்கலாம்.

இதுவே ஐ.நா மனித உரிமைச்சபைக்குள் மட்டுமல்ல அதற்கும் அப்பாலும், நீதியினை வென்றடைவதற்கான தமிழர்களின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

– சுதன்ராஜ்

Comments