யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் விநியோகிக்கும் பெரும் வலையமைப்பு ஒன்றை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நிர்மூலம் ஆக்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் பேபியன் என்கிற எஸ்.கரிகரன் (வயது 26) உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சிறிய 50 பைக்கற் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்தார்.
கடந்த இரு நாள்களாக பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம்  ஐந்துசந்திப் பகுதியில் வைத்து நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மேலும் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்துக்கான போதைப்பொருள் வர்த்தகத்தின் மைய நீரோட்டமாக விளங்குகிறார் என நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும் தகுந்த ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக அவர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரின் உதவியுடன் பேபியனை ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கையில் வைத்து கைது செய்தனர். மற்றைய இருவரும் ஐந்து சந்திப் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இரட்ணசிங்கம் வசீகரன் (வயது  24), பாலராஜா சிறிகாந் (வயது 23), இரட்ணசபாபதி பிரியந்தன் (வயது  24), சேகரன் சிறிகரன் (வயது  24) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments