யாழ்.மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டுஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப் பெறுவதற்கு வழி தெரியாமல் பொலிஸ் நிலையங்களையும், நீதி மன்றங்களையும் நாடிச் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப் பட்டப்படிப்பு என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் இவ்விடயத்தில் இளைஞர்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்றும்தெரிவி“துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரசியல் கட்சி அலுவலகத்தில் முன்னர் பணியாற்றிய ஒருவர் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பலரிடம் நிதி மோசடி செய்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் மட்டக்களப்பு அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஸ்மி கபூர் என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர், யுவதிகளிடம் நிதி மோசடி செய்தமை அம்பலமாகியுள்ளது.ஐரோப்பியன் பட்டப்படிப்புக் கல்லூரி என்ற பெயரில் திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்தியில் அலுவலகமொன்றைத் திறந்த இவர் இங்கு வைத்து பல இலட்சக்கணக்கான ரூபாய்களைச் சுருட்டியுள்ளார்.அக்கரைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் என்று கூறப்படும் இவர் தற்போது மேற்படி அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக இவரிடம் பணத்தைக் கொடுத்த மாணவர்கள் கூறுகின்றனர்.வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேற்படி நபர் குறித்து யாழ். அரச அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த அஸ்மி கபூர் என்ற நபர் தன்னிடமிருந்து 6 இலட்சத்து 37ஆயிரத்து 500 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் குறித்த அஸ்மி கபூர் என்பவர் தன்னிடமும் தனது மைத்துனரிடமும் இருந்து 10 இலட்சத்து 92ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் என்று கைதடி தெற்கைச் சேர்ந்த ச.சிந்துஜன் என்ற இளைஞரும் நேற்றுமுன்தினம் அரச அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.தனது தம்பியை வெளிநாட்டுப் பட்டப்படிப்புக்கு அனுப்பவதற்காக தமது குடும்பத்திடமிருந்த தங்க நகைகளை அடகு வைத்து 5 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பணத்தை தான் வழங்கியதாக அவர் கூறியுள்ளார். மேலும், தனது மைத்துனரும் தனது மகனைப் பட்டப்படிப்புக்கு அனுப்புவதற்கு 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை அஸ்மி கபூரிடம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று இவர் மேலும் பல இளைஞர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.இதேபோன்று, கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி இலட்சக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.மேலும், திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் சேவாலங்கா நிறுவனத்தில் தான் வேலை செய்வதாகவும் வெளிநாடுகளுக்கு இளைஞர்களை  அனுப்ப முடியுமென்றும் கூறி யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களிடம் பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தைச் சுருட்டிக் கொண்டு திருகோணமலைக்கு தப்பிச் சென்றுள்ளார்.அவரை தப்பி நம்பி பணம் வழங்கியவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதாகத் தெரிவித்துள்ளம்ர்.யாழ்.குடாநாட்டில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றமை குறித்து அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்றபோதிலும் இது குறித்து அலட்டிக் கொள்ளாத இளைஞர்கள் மோசடிக் கும்பலிடம் தொடர்ந்தும் பணத்தைக் கொடுத்து ஏமாந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தள்ளனர்.வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் வெளிநாட்டுப் பட்டப் படிப்புக்களை மேற்கொள்வதற்கும் பதிவு செய்யப்பட்ட பல நிறுவனங்கள் இயங்குகின்ற போதிலும் தமது பணத்தை மோசடிக் கும்பலிடம் இழக்கின்ற இளைஞர்கள் இனிமேலாவது விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் மேற்படி சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments