மே முதலாம் திகதி இடம்பெறவுள்ள உலக தொழிலாளர் தினக் கூட்டங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா, கினிகத்தேனை, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேமதாஸ நினைவு தினம் என்பன இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சி, ஈபிடிபி என்பவற்றின் மே தினக் கூட்டம் இடம்பெறுகிறது. நுவரெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டமும், கினிகெத்தனையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டமும் பூண்டுலோயாவில் மலையக மக்கள் முன்னணியின் கூட்டமும், மஸ்கெலியாவில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் கூட்டமும், பொகவந்தலாவையில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் கூட்டமும் ஹட்டனில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் கூட்டமும் இடம்பெறவுள்ளது. கொழும்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் மாநகர சபை வளவில் இடம்பெறவுள்ளதோடு இதற்கு கெம்பல் மைதானம், ஆயுர்வேத சுற்றுவட்டம், நாராஹென்பிட்ட பகுதிகளில் இருந்து பேரணிகள் வரவுள்ளன. இதனால் மே முதலாம் திகதி பகல் 12 மணிக்குப் பின்னர் பேஸ்லைன் வீதி(தெமடகொட – பொரளை, கனத்தை – மஹவத்தை), மருதானை வீதி (பொரளை – மருதானை), வீன்ஸ் வீதி, கன்னங்கர மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், ஆயுர்வேத சுற்றுவட்டம், பாடசாலை வீதி, கனத்தை வீதி, திம்பிரிகஸ்யாய வீதி (டொரின்டன் – மஹவத்தை) ஆகிய வீதிகள் மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் கொழும்பு பீ.ஆர்.சீ மைதானத்தில் இடம்பெறவுள்ளதால் சரணங்கர வீதி, பாமங்கடை சந்தி, ஸ்வேபட் மாவத்தை, ஹைலெவல் வீதி (கிருளபனையில் இருந்து டிக்மன் வீதி வரை) மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தின அனுஸ்டிப்பை முன்னிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, சேத்தவன வீதி, ஆமர் பாபர் சந்தி, சுமனதிஸ்ஸ மாவத்தை, சங்கராஜ சுற்றுவட்டம், சங்கராஜ மாவத்தை, தொழிநுட்ப கல்லூரி சந்தி, சாந்த பஸ்தியம் கந்த வீதி, மிஹிது மாவத்தை, நீதிமன்ற வீதி என்பன மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு மே முதலாம் திகதி வீதிகள் மூடப்படவுள்ளதால் கொழும்புக்கு உள்நுழையும், கொழும்பில் இருந்து வெளியேறும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். மே தின கூட்டங்களை முன்னிட்டு 10000ற்கும் அதிகமான பொலிஸார் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மே தினக் கூட்டங்களுக்கு என பொது மக்களை ஏற்றிவரும் பஸ் உள்ளிட்ட வாகன சாரதிகள் மித வேகத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments