எந்தவொரு யுத்தமும் பல துணைப் பாதிப்புக்கள் ஏற்படக் காரணமாக இருக்கும். ஆட்கடத்தல் தொடர்பாக கனடாவால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை வாசினியையும் பாதித்துள்ளது.

30 வயதுகளில் உள்ள வாசினி என்கின்ற தமிழ் பேசும் பெண், தாய்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் பாதிப்பை தாங்கி வாழ்வதுடன், கனடாவின் ரொரன்ரோவில் வாழும் தனது வயது முதிர்ந்த பெற்றோருடன் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்.

ஆனால் பாங்கொங்குக்கு வெளியே செயற்படும் ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் கனடாவுக்கு செல்வதை வாசினி ஒருபோதும் விரும்பவில்லை.

“இவ்வாறானதொரு ஆபத்தை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில் இது மிகவும் ஆபத்தானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் காணப்படுகின்றது” என வாசினி கூறுகின்றார்.

வாசினி தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி இங்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் இவர் தான் செல்ல வேண்டிய நாட்டை விட்டு தற்போது இடைவழியில் நாடற்றவராக வாழ்கின்றார். வாசினியைப் போல பல நூறு சிறிலங்காத் தமிழர்கள் தென்னாசிய நாடுகளில் தற்போது தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளாக, தாய்லாந்தில் வாசினி வாழ்ந்த போதிலும், தாய்லாந்து அரசாங்கம் இவரை சட்ட ரீதியற்ற குடிவரவாளர் என்றே கருதுகின்றது. வாசினி மீளவும் தனது சொந்த நாடான சிறிலங்காவுக்குச் சென்றால் அங்கே அவர் நிச்சயமாக சித்திரவதைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதுடன், சிறைகளில் அடைக்கப்படால். இவற்றுக்கப்பால், மரணத்தைக் கூட இவர் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

தமிழ்ப் புலிகளை அழிக்கும் நோக்குடன் பெரும்பான்மை சிங்கள ஆட்சியாளர்களால் 26 ஆண்டு காலமாகத் தொடரப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளின் முன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் பின்னர் வாசினி சிறிலங்காவை விட்டு வெளியேறினார். கனடாவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட தமிழ்ப் புலிகள் அமைப்பில் வாசினி 1990 களில் இணைக்கப்பட்டார்.

இவரும் இவரைப் போல் கனடாவின் குடியுரிமை பெறக் காத்திருக்கும் நூறு வரையான சிறிலங்காத் தமிழர்கள் கனேடிய அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கையின் பாதிப்பைச் சந்திக்கின்றனர். அதாவது தாய்லாந்தை தளமாகக் கொண்டு செயற்படும் ஆட்கடத்தல் வலையமைப்பு ஒன்றை கனேடிய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

கனடாவின் கடல் எல்லையை சட்ட ரீதியற்ற முறையில் அடையும் ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் கனேடிய அரசாங்கமானது அனைத்துலக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றது.

2009ல், MV Ocean Lady என்ற கப்பலில் 76 வரையான தமிழ் அகதிகள் கனடாவின் கரையோரத்தை வந்தடைந்தது. இது போன்று இதற்கு ஒரு ஆண்டின் பின்னர், 492 வரையான அகதிகளை ஏற்றிக் கொண்டு MV Sun Sea என்ற கப்பல் கனடாவை வந்தடைந்தது.

இந்நிலையில் கனேடிய பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் தாய்லாந்து அரசாங்கத்திடம் அங்கு செயற்பட்டு வரும் ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மேலும் 12 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தார். அத்துடன் கார்ப்பரின் அரசாங்கம் இவ்வாறான ஆட்கடத்தல்களில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்து மிகக் கடுமையான புதிய சட்ட வரைபொன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்ட வரைபானது விரைவான, இறுதி அங்கீகாரத்துக்காக செனற்றிடம் கையளிக்கட்டுள்ளது.

கனடாவின் மேற்குக் கரையோரத்தில் பிறிதொரு Ocean Lady அல்லது MV Sun Sea அடையாமல் இருப்பதற்காக தற்போது கனடா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் ஏனைய சில நாடுகள் இணைந்து கண்காணிப்பு மற்றும் அரசியல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இம்மாத ஆரம்பத்தில், ஆட்கடத்தல் வலையமைப்பின் பாங்கொங் தலைவரான சிறிலங்கர் ஒருவர் பிரான்சில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

ஆனால், இவ்வாறான சட்ட நடைமுறைப்படுத்தல்களால் அகதிகள் பாதிப்படைகின்றனர். தாய்லாந்து, அனைத்துலக அகதிகள் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வாசினி போன்று தாய்லாந்தில் தஞ்சமடைந்து வாழ்வோரை தாய்லாந்து அரசாங்கம் சட்ட ரீதியற்ற குடிவரவாளர் என்றே கருதிக் கொள்ளும்.

இதனால் வாசின் போன்றவர்கள், தமக்கு அகதி நிலை வழங்குமாறு கோரி ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையராலயத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் UNHCR வாசினி போன்றவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சந்தர்ப்பத்தில் இவர்களின் காத்திருப்புக்கள் பயனற்றதாகிவிடும்.

“ஒவ்வொரு மாதமும் நாங்கள் UNHCR செயலகத்துக்குச் சென்று வருகின்றோம். ஆனால் அவர்கள் எம்மை காத்திருக்கும் படி திரும்பக் திரும்பக் கூறுகின்றார்கள். பதில் எதுவும் வழங்கப்படாத நிலையில் நாங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும்?” என்கிறார் வாசினி.

அகதி நிலை கோரிய சிறிலங்காத் தமிழர்களில் 275 பேருக்கு அகதி நிலை வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், 142 பேருக்கு மறுக்கப்பட்டுள்ளதாகவும் UNHCR புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான தமிழ் மக்கள் தற்போது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலையில், அவர்கள் அங்கே சிங்கள அரசாங்கத்தால் மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக பாங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உதவி ஆசிய இயக்குனர் பில் றொபேற்சன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறானதொரு நிலையையே நாங்கள் தற்போது சிறிலங்காவில் காண முடிகின்றது. பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய சிறிலங்காத் தமிழர்கள் பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” என றொபேற்சன் மேலும் தெரிவித்துள்ளார். இவரது ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த ஆண்டில், சிறிலங்காவுக்கு தமிழர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை பிரித்தானிய அரசாங்கத்திடம் வழங்கியிருந்தது.

“படகுகளில் மக்கள் சட்ட ரீதியற்ற முறையில் உள்நுழைவதைத் தடுப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. தாய்லாந்தில் இதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன” என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்கா ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார். யுத்தத்துக்கு பின்னான சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளாகும் தமிழர்களின் நிலை தொடர்பாக அலன் கீனன் ஆவணப்படுத்தியுள்ளார்.

“அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்படுவோர் குறிப்பிடத்தக்களவு ஆபத்துக்களை சந்தித்து வருகின்றனர். அதாவது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றன” எனவும் அலன் கீனன் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் 300,000 வரையான சிறிலங்காத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் 2009ல் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் ஏனைய மீறல்கள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் அமைதி காப்பதை எதிர்த்து கனேடிய வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிப்பதில் தயக்கம் காட்டிய கனேடிய அரசாங்கம் தற்போது, சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் மிக மெதுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் கனடாவின் மேற்குக் கரையோரத்தை சட்ட ரீதியற்ற முறையில் வந்தடைய முயற்சிக்கும் படகுகளைத் தடுத்து நிறுத்துவதிலும் கனேடிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கார்ப்பர், தாய்லாந்துக்கான தனது தூதுவர் றொன் கொப்மானை ஆட்கடத்தல் விவகாரத்தைக் கையாளுமாறு வலியுறுத்தியுள்ளார். கொப்மன் இந்த விடயத்தில் ஓய்வேதும் இல்லாது தொடர்ந்து செயற்பட்டு வருவதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்ப்பர், ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பில் தனது சிறப்பு ஆலோசகராக ஊளுஐளு இன் முதன்மை வேவு அதிகாரியாகக் கடமையாற்றிய வோர்ட் எல்கொக்கை நியமித்துள்ளார். இது தொடர்பில் தென்னாசிய முழுமையும் பயணித்திருந்த எல்கொக் நேர்காணல் வழங்க மறுத்துவிட்டார்.

ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பில் கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் தாய்லாந்து அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைக்கின்றனர். “இது தொடர்பாக தகவல்களை பனிர்ந்து கொள்வதென்பது முக்கியமான ஒன்றாகும். நாங்கள் தற்போது சிறிலங்கர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம்” என தாய்லாந்தின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் நாயகமும், கடந்த ஆண்டில் தாய்லாந்து தேசிய காவற்துறையை தலைமை தாங்கியவருமான ஜெனரல் Wichean Potephosree தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்காக கனேடிய அரசாங்கமானது தாய்லாந்து அதிகாரிகளுக்கு கண்காணிப்பு, எல்லைப் பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் குடிவரவு போன்றவற்றில் சிறந்த பயிற்சிகளை வழங்கி வருவதாக மேற்கத்தேய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான முன் ஆயத்த நடவடிக்கையால் தாய்லாந்தில் ஆட்கடத்தல் குழுக்கள் தமது தளங்களைப் பலப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவம் எதிர்வு கூறப்படுகின்றது.

கனடாவின் மேற்குக் கரையோரத்தை சன் சீ கப்பல் சென்றடைந்ததன் பின்னர், கனேடிய அரசாங்கம் தாய்லாந்து அதிகாரிகளுக்கு கடும் தொனியில் கட்டளையிட்டதாகவும், “பிரதமரின் கட்டளையை பின்பற்றி செயற்பட வேண்டும்” என வலியுறுத்தியதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்;தின் உதவி ஆசிய இயக்குனர் றொபேற்சன் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஒரு சில வாரங்களில் தாய்லாந்தில் காத்திருந்த பல சிறிலங்கர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கான கட்டளையை தாய்லாந்தின் உயர் மட்ட அதிகாரிகள், காவற்துறையினர் போன்றவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என்பதே இங்கு பிரச்சினையாக உள்ளது” எனவும் றொபேற்சன் தெரிவித்துள்ளார்.

பாங்கொங்கில் உள்ள சிறியதொரு குடியிருப்பில் தங்கியிருக்கும் வாசினி கைது செய்யப்படவில்லை. “கடந்த ஆண்டில், எம்மிடம் நுழைவுவிசைவு இல்லாததால், தாய்லாந்து அதிகாரிகள் அதிகளவானவர்களை கைதுசெய்திருந்தனர். கடந்த ஆண்டில் இந்த அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்தது” என்கிறார் வாசினி.

வாசினியினுடைய பெற்றோர் பத்தாண்டுக்கு முன்னர் கனடாவின் ரொரன்ரோவில் குடியேறினர். இவர்கள் தற்போது கனேடிய அரசாங்கத்தின் சமூக சேவை உதவியைப் பெற்று வாழ்வதால் வாசினியை நிதியுதவி (ஸ்பொன்சர்) வழங்கி கனடாவுக்கு அழைக்க முடியாது.

வாசினி தமிழ்ப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக சில காலம் பணியாற்றியதால், அவர் கனடாவுக்கு செல்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. தான் பலாத்காரமாக புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டதாக வாசினி கூறுகின்றார். குடும்பத்தில் ஒருவர் புலிகள் அமைப்பில் இணைய வேண்டும் என்ற நிலை காணப்பட்டதால் தான் அவ்வாறு இணைந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

ஆனால் தான் புலிகள் அமைப்பால் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியைப் பெறவில்லை என்றும், அதில் தகவல் சேகரிப்பவராகவே செயற்பட்டதாகவும் வாசினி கூறுகின்றார். மே 2009 இல் யுத்தம் முடிவுற்ற போது தான் புதிய வாழ்வொன்றை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையிலிருந்த போது, சிறிலங்கா இராணுவத்தினர் புலி உறுப்பினர்களைக் கைது செய்ய முற்பட்ட போது, தான் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாகவும், தாய்லாந்தில் கடந்த 25 மாதங்களாக உள்ளதாகவும் வாசினி கூறுகின்றார். மீண்டும் தான் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கே தான் சாவை எதிர்நோக்குவது நிச்சயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நான் சிறிலங்கா விமான நிலையத்தை அடையும் போது, அங்கே அவர்கள் என்னைக் கைது செய்வார்கள். இந்த நாட்டைவிட்டு நீ எவ்வாறு வெளியேறினாய் என அவர்கள் முதலில் கேட்பார்கள். இதற்கான பதிலை என்னால் அவர்களுக்கு கூறமுடியாதிருக்கும்” என்கிறார் வாசினி.

தமிழ் அகதிகள் ஒவ்வொருவரின் நிலையும் துயரம் நிறைந்தது என்கிறார் அலன் கீனன். விடுதலைப் புலிகள் அமைப்பு நீண்ட காலமாக குடும்பத்தில் ஒருவரை தமது படையில் பலாத்காரமாக இணைத்து வந்தது என்பது உண்மையான விடயமாகும். ஆனால் பிற நாடுகளுக்கு தப்பிச் செல்லும் அகதிகள் ஒவ்வொருவரும் இதையே காரணமாகக் கூறமுடியும் எனவும் கீனன் கூறுகின்றார்.

“இவ்வாறான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அகதித் தஞ்சம் கோரும் மக்களின் சொந்த நாடு தனது மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உதவியை வழங்குவது சிறந்த தீர்வாக இருக்கும்” என தாய்லாந்து தேசிய பாதுகாப்பு சபையில் அனைத்துலக மூலோபயத்துக்கான இயக்குனராக பணியாற்றும் Bunnang தெரிவிக்கின்றார்.

“சிறிலங்கர்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளுக்காக கனேடிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு உதவி செய்து அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். இதன் மூலம் இவ்வாறான ஆட்கடத்தல் நடவடிக்கைகளை குறைக்கலாம். ஆனால் அதேவேளையில் இதற்கான அடிப்படைப் பிரச்சினையைக் கண்டறிந்து அதனைத் தீர்க்கும் நடவடிக்கையிலும் கனடா கவனம் கொள்ள வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பில் கனடா தனது கருத்தை வெளியிட்டமை மற்றும், நீண்ட காலமாக சிறிலங்காவில் தொடரும் இன வேறுபாடுகளைக் களைவதில் கனடா உதவுகின்றமை போன்ற செயற்பாடுகள் தொடர்பில் கனடா அரசாங்கத்தை கீனன் பாராட்டுகின்றார்.

“சிறிலங்கா அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு புலம்பெயர் மக்களை அதிகம் கொண்ட வெளிநாட்டு அரசாங்கங்கள் உண்மையில் தம்மாலான அழுத்தங்களை வழங்க வேண்டும்” எனவும் கீனன் தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம்: The Canadian Press மொழியாக்கம் : நித்தியபாரதி

Comments